Islamic Foundation Trust conducted an Eid Gettogether for Journalists and
writers on 29th Sep 2010 at IFT complex. The news has been published in
Dinamalar & Theekkadhir.

"மத நல்லிணக்கம், தேச ஒற்றுமைக்கு "புரிந்துணர்வு'
அவசியமாகிறது'

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2010,22:37 IST
சென்னை: நல்ல புரிந்துணர்வு மட்டுமே மத நல்லிணக்கத்திற்கும்,தேச ஒற்றுமைக்கும்
அடித்தளமாகும் என்று இஸ்லாமிக் நிறுவன அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில்
வலியுறுத்தப்பட்டது. இஸ்லாமிக் நிறுவன அறக்கட்டளை சார்பில், சென்னை பெரம்பூரில்
உள்ள, "சமரசம்' மாதமிருமுறை இதழின் அலுவலகத்தில், "ஈத்மிலன்' பத்திரிகையாளர்
சந்திப்பு நடந்தது. "கிரியேட்டிவ் கம்யூனிகேஷன்ஸ்' துணைத் தலைவர், அப்துல் ரஹீம்
அனைவரையும் வரவேற்றார்.
இஸ்லாமிக் அறக்கட்டளை தலைவர் ஷபீர் அகமது தலைமை ஏற்று பேசியதாவது:
இந்த அறக்கட்டளை
1980ம் ஆண்டு முதல் செயலாற்றி வருகிறது. இஸ்லாத்தை முஸ்லிம்களும், மாற்று மத
சகோதரர்களும் புரிந்து கொண்டதால் தான் தமிழகத்தில் அமைதியும், ஒற்றுமையும்
தழைக்கிறது. இந்த அறக்கட்டளை ஏழை, எளியவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவம்
உள்ளிட்ட பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம்:
பெரம்பூர் பகுதியில் அதிக அளவில் இஸ்லாமிய
மக்கள் வசிக்கின்றனர். அனைவரும் சகோதரத்துவத்துடன், மாற்று மத மக்களுடன்
ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். இப்பகுதியில் இருந்து வெளியாகும், "சமரசம்' பத்திரிகை
மூலம் மதநல்லிணக்க கருத்துகள் நமக்கு கிடைக்கின்றன.
"தீக்கதிர்' குமரேசன்: நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால், மனித நேயத்துடன்
கடவுளை நம்புகிறவர்கள் மீது நம்பிக்கை கொண்டவன். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி
நடத்தப்பட வேண்டும்.
வசீகரன்: மற்ற மதங்களை விட, இஸ்லாமியர்கள்தான் அதிக அளவில் மத நல்லிணக்கத்தை
வலியுறுத்தி விழாக்களை நடத்துகின்றனர். நான் சிறு வயதில் இந்த நிகழ்வுகளை
பார்க்கும்போது, முஸ்லிம்கள் பயத்தினால் தான் இதுபோன்ற மத நல்லிணக்க விழாக்களை
நடத்துகின்றனரோ என்று நினைத்தேன். ஆனால், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற ஒற்றுமையை
உணர்த்தவே மத நல்லிணக்க விழாக்கள் என்பது பிறகுதான் புரிந்தது.
"துக்ளக்' அரி: இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற கருத்தும், எண்ணமும்
நீக்கப்படவேண்டும்.
"தினமலர்' ரங்கராஜ் பாண்டே:
நமக்குள் நல்ல புரிந்துணர்வு தேவை. அவை இல்லாத
நிலையில், அமைதியை விரும்பாத, "விஷமிகள்' மூலம் கருத்து வேறுபாடுகளும்,
வன்முறைகளும் பெரிதாக்கப்படுகின்றன. மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் அமைதிக்கும்,
நமக்குள் உருவாகிற, "நல்ல புரிந்துணர்வு' அடித்தளமாகிறது. மனம், மதம் ஒற்றுமைக்கான
இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும்.
ரங்கநாதன்: சினிமாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
மக்களின் மனதில் தவறான கருத்துக்களை பதிய வைக்கும் சினிமாத்துறை இதை உணர்ந்து,
இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிக் அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் ஹபீப் முகமது: இஸ்லாம் என்றாலே அமைதி
என்று பொருள்; பின் எப்படி அது தீவிரவாதத்தை போதிக்கும். இங்கு பேசிய ரங்கநாதன்
சொன்னது போல், சினிமா, மத ஒற்றுமையை சீரழித்து வருகிறது. இஸ்லாமியர்கள் என்றாலே
தமிழ் பேசக் கூட தெரியாதவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. தலைப்பாகை
கட்டிக்கொண்டு தாடி வைத்துக் கொண்டால் தீவிரவாதியா; கல்லூரி மாணவர்கள் கூட,
நாகரிகமாக தாடி வைத்திருக்கின்றனர்; அப்படி என்றால் அவர்கள் தீவிரவாதியா? மக்கள்
தெளிவாக உள்ளனர்; அவர்களிடத்தில் வேறுபாடு இல்லை. மலிவான ஆதாயத்திற்காக வேற்றுமைகளை
விளம்பரப்படுத்தி, வகுப்புவாதிகள் மகிழலாம். ஆனால், அது நீடிக்காது.
ஆன்மிகவாதிக்கும், வகுப்புவாதிக்கும் வேற்றுமை உள்ளது. வகுப்புவாதிகள் என்றாவது
மனிதநேயம், இறை அச்சம் குறித்து பேசியது கிடையாது. அவர்களால் மனித இனத்தின்
ஒற்றுமையை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மதத்திலும் வகுப்புவாதிகள் உள்ளனர்.
அவர்களை அடையாளம் கண்டு, மக்கள் ஒதுக்க வேண்டும்.
ஈத்மிலன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர்
ரவீந்திரதாஸ், கலைஞர் "டிவி' பெரைரா, "நேருக்கு நேர்' வீரபாண்டியன், ஜெயந்தி
கண்ணப்பன் ஆகியோர் பேசினர். அனைவரும், அயோத்தி தீர்ப்பை கருத்தில் கொண்டு மத
நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினர்.
http://www.dinamalar.com//News_Detail.asp?Id=96513
